Christian Historical Society

இசைத்தமிழ் இயக்க முன்னோடி ஆபிரகாம் பண்டிதர்

~Dr.Jansy Paulraj
~Dr.Jansy Paulraj

jansy.emmima@gmail.com

People of God

இசைத்தமிழ் இயக்க முன்னோடி ஆபிரகாம் பண்டிதர்

 

எதையும் செவிமடுக்க விரும்பாதோரையும் இசை, தன்பால் ஈர்க்கும் சக்திவாய்ந்தது. அத்தகைய பேராற்றல் மிக்க இசை, இவ்வுலகின் ஒவ்வொரு அசைவிற்குள்ளும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. இசையை, இசையிலக்கண முறைமைகளால் நெறிபடுத்தி, ஆய்ந்த சொற்களுக்குள் பொதிந்து இசைக்கும்போது இன்னிசையாகின்றது.

 

தமிழர்களின் வாழ்வில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக இசை மிக நேர்த்தியான வடிவமடைந்து வந்திருப்பதற்கான சான்றாதாரங்கள் இலக்கியங்களிலும், பழந்தமிழிர்களின் வாய்மொழிப் பாடல்களிலும் நிரம்ப கிடைக்கின்றன.

 

கி. மு ஆறாம் நூற்றாண்டு முதல் கி. பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான சங்க காலகட்டத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் தமிழிசையைப் பற்றின விரிவான குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்திற்கான உரைகளின் மூலம் இதை நாம் எளிதில் அறிய முடிகிறது. அதன் பிறகு சங்கம் மருவிய காலகட்டத்தில் சமணர்களின் ஆதிக்கத்தினால் தமிழிசை கண்டு கொள்ளப்படாமல் போனது. தொடர்ந்து ஏற்பட்ட, பக்தி இயக்கங்களின் தாக்கங்களால் தேவாரங்கள், பிரபந்தங்கள் போன்றன தமிழிசையை உயிர்ப்பித்தன.

 

14 ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தெலுங்கு விசயநகர ஆட்சியினால் தெலுங்கு மொழி, இசையில் தன் முழு ஆக்கிரமிப்பையும் செலுத்தி தமிழிசை மரபினைமறக்கடித்தது என்றே கூறலாம்.

 

இசையரங்குகளில் தெலுங்கு மொழிப் பாடல்களே முதன்மைப் பெற்றன. தமிழுக்கு இசைமரபென்பதே இல்லை என்ற ஆதாரமற்ற கூற்றுகளை அன்றைய இசையுலகம் ஏற்கும்படியான செயல்களை ஒருசிலர் திட்டமிட்டு ஏற்படுத்தியிருந்தனர். இந்நிலையை அகற்ற இயற்கையின் பெருஞ்சக்தியாய் 1859 ஆம் ஆண்டு அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் சாம்பூர் வடகரை என்ற ஊரில் ஆகஸ்டு மாதம் இரண்டாம் தேதி ஆபிரகாம் பண்டிதர் என்ற இசைஞானி பிறந்தார். இவரது பெற்றோர் முத்துச்சாமி மற்றும் அன்னம்மாள்.

 

இவர் தனது தொடக்கக் கல்வியைப் பங்களாச் சுரண்டை என்ற ஊரில் பயின்றார். 1874 ஆம் ஆண்டு திண்டுக்கலில் அமைந்திருந்த நார்மல் என்ற ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்து அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். இளம் வயதிலேயே எதையும் ஆராய்ந்துணரும் அறிவாற்றலும், எளிதில் கற்றறியும் மதிநுட்பமும் உடையவராக விளங்கிய ஆபிரகாம்பண்டிதர் இயல்பாகவே இசை ஆற்றல் மிக்கவராகவும் விளங்கினார்.

 

இவர் ஆசிரியர்பயிற்சிப் பெற்ற நார்மல் என்ற ஆசிரியர்பயிற்சி பள்ளியை நிர்வகித்த அருட்திரு யார்க் துரை என்பவரும் சிறந்த இசையார்வலர். இவர் 1879 ஆம் ஆண்டு தனது நாடான இங்கிலாந்திற்கு செல்ல நேர்ந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபச்சார விழாவில் அப்பயிற்சிப்பள்ளி மாணவர்களைப் பாடல்கள் பாட பயிற்றுவித்து தானும் பாடிக் காட்டினார். அந்நிகழ்வில் அவரது சங்கீத அறிவைக்கண்டு வியந்த யார்க் துரை அவருக்கு ஒரு வயலினை அன்பளிப்பாகக் கொடுத்துச்சென்றார். இந்நிகழ்வே பண்டிதரின் இசையார்வத்தை மேலும் அதிகரிக்கவும், அதில் தீராத பற்றை ஏற்படுத்தவும் அடித்தளமானது.

 

இதனைத் தொடர்ந்து இசையின்மீதிருந்த தணியா காதலால் இசையைப்பற்றின ஆராய்ச்சியில் தனது காலத்தைப் பெருமளவில் செலவிட்டார். திண்டுக்கல் சடையாண்டி பட்டரிடம் இசைப் பயிற்சியை முறையாகப் பயின்ற இவர் தஞ்சையில் ஒரு நாதஸ்வர வித்வானிடமும் இசையைக் கற்றுத்தேர்ந்தார். அத்தோடு ஆர்மோனியம், ஆர்கன், வீணை, பிடில் முதலிய இசைக்கருவிகளை வாசிக்கவும் கற்றுத் தேர்ந்தார். மேலும் ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ. ஜி. பிச்சைமுத்து என்பவரிடம் மேற்கத்திய இசையையும் கற்றுத் தேர்ந்தார்.

 

இந்நிலையில் இசையோடு ஒன்றிபோன ஆபிரகாம் பண்டிதர் எதையும் நுணுகி ஆராயும் இவரது இயல்பான அறிவாற்றலால் தெலுங்கு மொழியில் பாடப்படும் கர்நாடக சங்கீத இசைமரபு, பழமை வாய்ந்த தமிழ் இசை மரபிலிருந்து தோன்றியது தான் என்ற உண்மையை அறிந்தார். எனவே அதற்கான ஆதாரங்களையும், அனுமானங்களையும் தேடியலைந்தார். இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று, இசை ஆய்வாளர்களையும், பாடகர்களையும் சந்தித்து இசைக் குறிப்புகள் இருந்த நூல்களையெல்லாம் சேகரித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.

 

 தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், அதன் உரைகள், நிகண்டுகள், காப்பியங்கள், தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், ஆகிய நூல்களில் கிடைக்கப்பெற்ற இசைக் குறிப்புகளை ஒன்று திரட்டி தனது ஆய்வின் கருதுகோளை நிரூபிக்க அரும்பாடுபட்ட முதல் இசைப் பெருங்கடல் ஆபிரகாம் பண்டிதரே. இதன் பொருட்டு 1912 ஆம் ஆண்டு முதல் 1916 வரையிலான ஐந்து ஆண்டுகளில் “சங்கீத வித்தியா மகாஜன சங்கம்” என்ற பெயரில் ஏழு இசை மாநாடுகளை தஞ்சையில் தனது சொந்த செலவில் நடத்தினார்.

 

அம்மாநாடுகளில் இந்தியாவின் அன்றைய இசை வல்லுனர்களையும் பாடகர்களையும், இசைநிபுணர்களையும், மேற்கத்திய இசை வல்லுநர்களையும் அழைத்து தமிழ் இசையின் வேர்களைத் தேடிய தனது ஆய்வை அயராது நிகழ்த்தினார். தமிழிசையில் நுட்ப சுருதிகள் 22 அல்ல என்றும் 24_48_96 என்ற எண் விரிவானதென்றும், தமிழிசை மேல்நாட்டு சங்கீதம் கண்டறியாத இசை நுணுக்கம் வாய்ந்தவை என்றும் நிலைநாட்ட முயன்றார்.

 

சுருதிகள் பற்றிய தனது இக்கருத்துக்களை, 1916 ல் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசைமாநாட்டில் விரிவுரையாற்றும் போது அவரது மகள்கள் திருமதி மரகதவல்லி துரைப்பாண்டியன் சுருதிகளின் நுட்பங்களை அழகாகப் பாடியும், திருமதி கனகவல்லி நவமணி வீணையில் வாசித்தும் காட்டினர். இசையில் புதிய இராகங்களையும் உருவாக்க இயலும் என்ற இசைவெளிச்சத்தை இசையுலகத்திற்குள் புகுத்தி, தனது இசைப்படைப்பாற்றலை ஏனைய இசைக்கலைஞர்களுக்குள்ளும் ஏற்படுத்தியவர், ஆபிரகாம் பண்டிதர்.

 

தமிழிசையில் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை, என்ற நான்கு இசைமுறைகள் இருந்தன என்பதை வகைப்படுத்தி சூத்திரங்களின் ஆதாரத்தோடு முதன்முதலாக நிலைநிறுத்திய பெருமை இவரையே சாரும். தமிழிசையை முறைப்படி பயிலும் மாணாக்கர்களும் அன்றைய வடமொழிப் பாடல்கள் வழியாகவே கற்கும் நிலைதான் இருந்து வந்தது. தமிழில் பாண்டித்துவம் பெற்று இலக்கண முறைமை தவறாமல் செய்யுள் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்த ஆபிரகாம் பண்டிதரால் இதனை ஏற்க இயலவில்லை.

 

இக்குறையைப் போக்க 96 தமிழ்ப் பாடல்களைக் கொண்ட கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூலை 1907-இல் எழுதி வெளியிட்டார்.

 

இன்றுவரை இதிலுள்ளப் பாடல்கள் சமய விழாக்கள், திருமணச் சடங்குகள் போன்ற விழாக்களில் பாடப்படுகின்றன.

 

கண்டேனென் கண்குளிர_ கர்த்தனையின்று கண்டேனென் கண்குளிர என்ற கீர்த்தனைப் பாடல், பிலகரி இராக சுரஜதியினால் அமைந்த, வாரும் தேவ தேவா இங்கு வாரும் உமதடிமை மனமகிழ என்ற பாடல், மங்களம் செழிக்க கிருபையருளும் மங்கள நாதனே * என்ற திருமணப் பாடல் போன்றன இன்றும் ஆபிரகாம் பண்டிதரின் தமிழ் பற்றையும் கீர்த்தனைகள் இயற்றும் மெய்யாற்றலையும் பறைசாற்றிக் கொண்டே இருக்கின்றன. முதன் முதலில் தமிழ் கீர்த்தனைகளுக்கு இசையமைத்துப் பாடும் நெறிமுறைகளை வகுத்தளித்தப் பெருமை இம்மகானையே சாரும்.

 

கர்நாடக இசைக்கலைக்கான மூலம் வடமொழியில் தான் உள்ளன, என்ற ஆதாரமற்ற கருத்துக்களைத் தனது ஆய்வினடிப்படையில் தமிழிசையே அதற்கான மூலம் என்ற அவரது கருத்தை நிரூபித்து, ஆரிய பார்ப்பனியமாக்கப்பட்ட தமிழ் இசைக் கலையை மீட்டெடுக்க தன் வாழ்நாளெல்லாம் அதுசார்ந்த ஆய்வுகளைச் செய்து தமிழிசைக்கு அரும் பணியாற்றியவர் தமிழிசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர்.

 

தனது இசை ஆய்வின் முடிவுகளை கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலாக 1917 ஆம் ஆண்டு தமிழுக்கு இணையில்லா இசைப் பொக்கிஷமாக படைத்தளித்தார். 1395 பக்கங்களை உடைய இந்நூல் இன்று வரை தமிழிசை ஆய்வுகளுக்கான முதன்மை நூலாக விளங்கி வருகிறது.

 

 இசைக்காகவே தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தத்தம் செய்த இப்பேராசான் 1919 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ஆம் தேதி இவ்வுலகைவிட்டு மறைந்தாலும் அவரது மகன் டாக்டர். ஆ. வரகுணபாண்டியன் பாணர்கைவழி யாழ் என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். இவரது பெயரன் பேராசிரியர் து. ஆ. தனபாண்டியன் இசைத் தமிழ் வரலாற்றுத் தொகுதிகளையும், புதிய இராகங்கள், இராகங்களின் நுண்ணலகுகள் போன்ற நூல்களை இயற்றி தமிழிசைக்கு பெருந்தொண்டாற்றனர்.

 

 அவரது வாரிசுகளோடு நில்லாமல் தமிழிசை இயக்கம் ஒரு மாபெரும் பண்பாட்டியக்கமாகத் தொடர்ந்தது. சுவாமி விபுலானந்தர், எஸ். இராமநாதன், கு. கோதண்டபாணி, அ. இராகவன், வரகுண பாண்டியன், வீ. ப. க. சுந்தரம், குடந்தை சுந்தரேசனார், சேலம் ஜெயலட்சுமி, நா. மம்மது போன்ற தமிழிசை ஆய்வாளர்கள் தமிழிசைக்குப் பெரும் பங்காற்றினர். 1941 ஆம் ஆண்டு இசையில் தமிழ்மொழியிலான பாடல்களை வலியுறுத்தி தொடங்கப்பட்ட தமிழிசை மாநாட்டிற்கான மூலமும் ஆபிரகாம் பண்டிதரின் தமிழ்ப் பற்றின் தாக்கம் தான் என்றால் அது மிகையாகாது.

 

ஆபிரகாம் பண்டிதரின் தமிழிசை ஆய்வு, இப்பேருலகத்திற்கு அளிக்கப்பட்ட பெரும் பேறு; இசைக் கலைஞர்களின் இசைப்பயணத்தை கூர்மையாக்கும் இசையுளி;புதுப்புது இசைப்பரிமாணங்களைப் படைக்கத்தூண்டும் இசைப் பேராண்மை. இவரது செயற்கரிய இப்பணி இவ்வுலகின் சுவாசம் உள்ளரை இசையாய் எங்கும் வியாபித்திருக்கும்.

 

 முனைவர் த. ஜான்சிபால்ராஜ்.

 திருநெல்வேலி